எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் -நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் பங்கேற்றார்!

த.வெ.க. தலைவர் விஜய், "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்ற நூலை வெளியிட்டார். முதல் பிரதியை அம்பேத்கரின் பேரனும் சமூக போராளியுமான ஆனந்த் டெல்டும்டே பெற்றுக்கொண்டார்.

எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் -நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் பங்கேற்றார்!

"எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்ற நூல், விகடன் பிரசுரம் மற்றும் விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் நிறுவனத்தின் இணைப்பில் உருவாக்கப்பட்டது. இந்த நூலின் உருவாக்கத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, இந்து என். ராம், விசிக தலைவர் திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட மொத்தம் 36 பேர் பங்களிப்பு செய்துள்ளனர்.  

இந்நூலின் வெளியீட்டு விழா இன்று (டிசம்பர் 6) சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்த த.வெ.க தலைவர் விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், சிலையுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.  

மேடையில் நடந்த நிகழ்ச்சியில், த.வெ.க. தலைவர் விஜய், "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூலை வெளியிட்டார். முதல் பிரதியை அம்பேத்கரின் பேரனும் சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, மூன்றாவது பிரதியை ஆதவ் அர்ஜுனா, நான்காவது பிரதியை விகடன் குழுமத் தலைவர் சீனிவாசன் பெற்றுக் கொண்டனர்.  

இதில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

நிகழ்வின் போது, ஆதவ் அர்ஜூனா பேசுகையில், "பட்டியலினத்தை சாராத ஒருவர் அம்பேத்கர் நூலை வெளியிட வேண்டும் என்பது அண்ணன் திருமாவளவனின் கனவு. அது இங்கு நிறைவேறியுள்ளது. சகோதரர் விஜய் இந்த நூலை வெளியிட்டது, தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று தெரிவித்தார்.